சற்றுமுன்

Sunday 31 July 2011

யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை: முதலமைச்சர் ஜெயலலிதா

அ.தி.மு.க. அரசு பதவியேற்ற இரண்டு மாதத்தில், யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. நிலத்தை அபகரித்தவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார் மீது, பொலிசார் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கின்றனர் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின், முதல் செயற்குழு கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பிற்பகல், 3.30 மணியளவில் துவங்கிய செயற்குழு கூட்டம், இரண்டு மணி நேரம் நீடித்தது. 

பின்னர், ஆக. 4 ல் துவக்கப்படும் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி, நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, கடந்த சில நாட்களாக பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று (நேற்று) காலை, ஒரு சம்பவம் காரணமாக ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். (அப்போது குறுக்கிட்ட முதல்வர் கைது செய்யப்படவில்லை என்றார்)
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு வரவேற்பு எப்படி உள்ளது? 

கடந்த தி.மு.க. ஆட்சியில், ஏராளமான நிலங்கள் அபகரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், நில அபகரிப்பு வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தினமும் ஏராளமான நில அபகரிப்பு புகார்கள் வருகின்றன. அவற்றை ஒருங்கிணைத்து விசாரணை செய்ய, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, நில அபகரிப்பு வழக்கு விசாரணை மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விரைந்து விசாரணை நடத்த, விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். 

நில அபகரிப்பு வழக்குகளில் 1,400 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளீர்கள்?
இந்த ஆட்சியிலும், நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறை, பத்திரப்பதிவு துறை, பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
புகார்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டிவிட்டது. யார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அனைவருக்கும் தெரியும். யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து உங்கள் கருத்து? இதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும், நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் காங். தலைவரும் இந்த விவகாரம் குறித்து முழு அறிக்கையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதாக, கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளாரே? 

அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டு மாத காலத்தில், யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. நில அபகரிப்பு குறித்து, பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கின்றனர். பொலிஸ் துறை அந்த புகார்கள் மீது சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யாரையும் இந்த அரசு பழிவாங்கவில்லை. 

கடந்த ஆட்சியில், அப்போதைய முதல்வர் தொடங்கிய தொலைக்காட்சியில், தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று முதலீடு செய்துள்ளது. இந்த தொலைக்காட்சியில் 20 சதவீதம் முதலீடு செய்த கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? 

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணிக்கிறது. சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை, உச்சநீதிமன்றம் முடிவு செய்யும். இதில், இதற்கு மேல் நான் எதையும் கூற விரும்பவில்லை.
சானல் 4 ல் ஒளிபரப்பான கொடூர சம்பவத்திற்குப் பின், இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் அனைத்து எம்.பி.க்களும் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதே?
இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்நாட்டின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு அவைகளிலும் எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டியது அவசியம். 

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். 

சமச்சீர் கல்வியை நீதிமன்றம் உத்தரவிட்டும் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை உச்சநீதிமன்றம் ஆக. 2ம் திகதி ஒத்திவைத்துள்ளது. அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றார்.

அரசு கேபிள் தொலைக்காட்சி அமல்படுத்துவதன் நிலை குறித்து கேட்டபோது அரசு கேபிள் தொலைக்காட்சியை கொண்டு வருவதற்காக விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. விரைவில் தொடங்கப்படும் என்றார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More