சற்றுமுன்

Wednesday 27 July 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வாய்ப்பில்லை! அரசு வக்கீல்

சமச்சீர் கல்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைப்பெற்ற பரபரப்பான வாதத்தில் ‘‘சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர்  கூறினார். 
 
இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து, ‘‘இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க முடியாது.  ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என உத்தரவிட்டனர். வரும் 2ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக பெற்றோர் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். கடந்த 2 மாதங்களாக மாணவ, மாணவிகள்  பாடங்களை படிக்க முடியவில்லை. குறிப்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே உடனே சமச்சீர் புத்தகத்தை வழங்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவை ரத்து செய்யக்கூடாது’’ என்று அதில் கூறியுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி விசாரணை நேற்று  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சவுகான் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக ஆஜராகிய மூத்த வக்கீல் பி.பி.ராவ் சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. தேசிய அளவிலான தரத்துடன் சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு வழங்க உயர்மட்டக் குழு அமைத்து இதுகுறித்து ஆராய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் தேவை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாடபுத்தகங்கள் தரமானதாக இல்லை’’ என்றார். 

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு , சமச்சீர் கல்வியை தள்ளிவைத்ததாக கூறியுள்ளீர்கள். அதை எந்த ஆண்டு அமுல்படுத்துவோம் என்று கூறவில்லை; அதே சமயம்,  சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளை கூறிவிட்டு, 2004ம் ஆண்டு  பாடப்புத்தகத்தை அமல்படுத்த திட்டமிடுவது  ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு விரிவாக நாளை (இன்று) பதில் அளிப்பதாக அரசு வக்கீல் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை நாளை  தொடரும் என்று உத்தரவிட்டனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More