சற்றுமுன்

Saturday, 13 August 2011

மோடி அரசு மீது ஐ.பி.எஸ் அதிகாரி புகார்

குஜராத் இனப்படுகொலை வழக்கில் அரசு தன்னை பலிகடா ஆக்குவதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து இன்னொரு ஐ.பி.எஸ் அதிகாரியும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி ரஜனீஷ் ராய் என்பவர் இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
சொஹ்ரபுத்தீன் ஷேக் வழக்கில் நேர்மையான விசாரணையை நடத்தவதற்கு எதிராக மேலதிகாரிகள் நிர்பந்தம் அளிப்பதாக அவர் தீர்ப்பாயத்திடம் புகார் அளித்துள்ளார்.
2005 நவம்பர் மாதம் சொஹ்ரபுத்தீன் ஷேக் அஹ்மதாபாத்தில் வைத்து போலி என்கவுண்டரில் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டார். சில தினங்களுக்கு பிறகு அவருடைய மனைவி கவ்ஸர்பீயும் கொலைச் செய்யப்பட்டார். குஜராத் முதல்வர் மோடியை கொலைச் செய்யவந்த பயங்கரவாதிதான் சொஹ்ரபுத்தீன் ஷேக் என குஜராத் ஏ.டி.எஸ் கூறியது. விசாரணையில் இது போலி என தெரியவந்தது. மேலும் சிக்கலில் மாட்டிய மோடி அரசு 2007 ஆம் ஆண்டு ஏ.டி.எஸ்ஸின் வாதம் தவறு என நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் தனது விசாரணை அறிக்கையை தவறு என கூறி நிராகரித்த மேலதிகாரிகளான பி.சி.பாண்டே, ஒ.பி.மாத்தூர் ஆகியோரின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பிய ரஜனீஷ் தீர்ப்பாயத்தை(ட்ரிப்யூனல்) அணுகியுள்ளார்.
சொஹ்ரபுத்தீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி ஆகியோர் கொலைத் தொடர்பான விசாரணை விபரங்களை பதிவுச் செய்யக்கூடாது என இருவரும் தன்னை நிர்பந்தித்ததாக ரஜனீஷ் கூறுகிறார். அன்றைய குஜராத் உள்துறை அமைச்சரான அமீத் ஷா உள்ளிட்ட கும்பல் விசாரணை அறிக்கையில் தேவையில்லாமல் தலையிட்டதற்கு பாண்டே மெளன அனுமதியை வழங்கினார் என ரஜனீஷ் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் அரசுக்கு எதிரான பகுதிகளை நீக்கம் செய்து பாண்டே உண்மையை மூடி மறைத்தார்.
குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து துணிச்சலாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்த மோடி அரசு இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை நானாவதி கமிஷனுக்கு ஒப்படைத்ததாக ஐ.பி.எஸ் அதிகாரியான ராகுல் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே அதிகாரிகளை பலிகாடா ஆக்கும் மோடி அரசின் நடவடிக்கையை மத்திய அரசு கண்டித்துள்ளது. ரஜனீஷ் கோரினால் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More