தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பியூ தாய் கட்சியைச் சேர்ந்த இங்லக் ஷினவத்ரா வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் கடந்த ஜூலை 3-ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் இங்லக்கின் பியூ தாய் கட்சி ஆளும் கட்சியான ஜனநாயக் கட்சியைத் தோற்கடித்தது. நாட்டின் மொத்த வாக்கில் ஐந்தில் மூன்று பங்கு வாக்கைப் பெற்று வெற்றி வாகை சூடியது.
இந்நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 296 எம்.பி.க்கள் இங்லக்குக்கு ஆதரவாகவும், 3 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். 197 எம்.பி.க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். இதையடுத்து 50 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் சோம்சாக் அறிவித்தார்.
தாய்லாந்தில் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்தே மறைமுக ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. 2006-ல் பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவத்ராவைப் பதவி இறக்கிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் சுராயுத் சுலனான்ட் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2008-வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார்.திடீரென அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சொம்சாய் வோங்சாவத் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜனநாயக ரீதியிலான அரசைத் தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை 3-ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தலில் ராணுவத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தி பிரதிபலித்தது.
தாய்லாந்து இக்கட்டான சூழலை சந்தித்துவரும் நிலையில் இங்லக் ஷினவத்ரா பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தை உருவாக்குவதுடன் ஜனநாயக அரசிடமிருந்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்டாய நிலையில் அவர் உள்ளார்
0 comments:
Post a Comment