சற்றுமுன்

Sunday 24 July 2011

இராக்கின் மீது பொருளாதாரத் தடையும், இறைத் தூதரின் முன்னறிவிப்பும்

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகள் குறித்து மிகத் தெள்ளத் தெளிவாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அவற்றில் பலவும் அவர்கள் காலத்திலேயே நடந்து இருக்கிறது. மற்றைய அவர்களது முன்னறிவிப்புகள் இன்றைய காலத்தில் ஒவ்வொன்றாக நடந்து வருவதை நாம் நேருக்கு நேர் கண்டு வருகிறோம். மறுமை நாள் ஏற்படும் வரை நடக்கவிருக்கும் பல நிகழ்வுகள் குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புகள் செய்துள்ளார்கள் என்பதை பின் வரும் நபி மொழி நமக்கு உணர்த்துகிறது. 


அபூ சயீத் அல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு பகலன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகையை தொழ வைத்தார்கள். அதன் பிறகு உரை ஒன்று நிகழ்த்தினார்கள், அப்போது மறுமை நாள் தோன்றும் வரையிலும் நடை பெறவிருக்கும் அனைத்து (முக்கிய) நிகழ்ச்சிகள் குறித்தும் எங்களுக்கு முன்னறிவிப்பு செய்தார்கள். அதனை மனனம் செய்து கொண்டவர்களும் உண்டு, மறந்து போனவர்களும் உண்டு. நூல்: திர்மதி.
இதே கருத்துள்ள நபி மொழியினை ஹுதைஃபா(ரலி) அவர்கள், முகீரா(ரலி) அவர்கள் இன்னும் பல நபித் தோழர்களும் அறிவிப்பு செய்துள்ளது முஸ்லிம் மற்றும் இப்னு ஹிப்பான் போன்ற பல நபி மொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது.

இராக்கின் மீது பொருளாதாரத் தடை
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதாக முன்னறிவிப்பு செய்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இராக்கின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பற்றிய பின் வரும் அவர்களது 
 முன்னறிவிப்பு:
ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இராக் மக்கள் மீது எதிர்காலத்தில் உணவும், நாணயமும் தடை செய்யப்படும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய போது, அந்தத் தடையை ஏற்படுத்துவோர் யார்? என்று நாங்கள் வினவினோம். அதற்கவர்கள், அந்நிய மொழி பேசுவோர் என்று கூறினார்கள்.
ஷாம் மக்கள் மீதும் எதிர்காலத்தில் உணவும், நாணயமும் தடை செய்யப்படும் என்று கூறினார்கள். அந்த தடையை ஏற்படுத்துவோர் யார்? என்று வினவினோம். ரோம் நாட்டவர்கள் என்று கூறி, சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பிறகு கூறினார்கள்: என் சமுதாயத்தில் கடைசி காலத்தில் ஒரு கலீஃபா தோன்றுவார் அவர் செல்வத்தை கணக்கின்றி (ஏழைகளுக்கு) வாரி, வாரி வழங்குவார்…. நூல்: முஸ்லிம்.

இந்த நபி மொழியில், அந்நிய மொழியினரை குறிக்க அஜ்ம் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த அஜ்ம் என்ற வார்த்தை அரபு மொழியறியாத அனைவருக்கும் சொல்லப்படும். அதனை அந்நிய மொழி பேசுவோர் என இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அந்நிய மொழி பேசும் அமெரிக்கர்களால் கி.பி. 1991 ஆண்டு முதல் இராக் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பற்றிய செய்தியை 1430 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மிகத் துல்லிமாக அறிவிப்புச் செய்திருப்பது அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதற்கான சரியான சான்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. வளைகுடா யுத்தத்திற்குப் பிறகு இராக்கின் மீது ஐ.நா.சபையின் துணையுடன் அந்நிய மொழி பேசுபவர்களால் அநியாயமான முறையில் இராக் மக்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து பேசவோ, கண்டிக்கவோ உலக நாடுகளில் எதுவும் முன் வரவில்லை. மௌனச்சாட்சிகளாக இருந்து வேடிக்கை பார்ப்பதை தவிர அமெரிக்காவை எதிர்த்து அவர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் திறானியற்றவர்களாக இருந்து வந்ததையும் யாரும் மிக எளிதில் மறந்து விட முடியாது. அதனால் பட்டினிச் சாவுகளும், சிகிச்சைக்கு மருந்துகளின்றி நோயுற்று மடிந்தவர்களும் ஏராளம். பிறப்பின்றி இறந்துவிட்ட சிசுக்களின் எண்ணிக்கையோ அதைவிட ஏராளம். உலக மனசாட்சியையே உலுக்கிடும் வகையில் ஊனப்பிறவிகளாக பிறந்து, அன்னியர்களின் கொடூரச் செயல்களுக்கு உலக அரங்கில் சாட்சிகளாக விளங்குபவர்கள் அதிலும் ஏராளாம்.

இந்த நபி மொழியின் தொடரில் பொருளாதாரத் தடை ஷாம் நாட்டவர்கள் மீதும் விதிக்கப்படும் என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. அன்றைய ஷாம் என்பது இன்றைய பாலஸ்தீனம், சிரியா, ஜோர்டான், லெபனான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும். இப்போது பாலஸ்தீனம், சிரியா பகுதியில் நடைபெறும் அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. மனித உரிமைகள் கழுத்து நெறிக்கப்பட்டு குற்றுயிராக இருக்கும் அந்தப் பகுதியில் நியாயம் பேச எந்த நாடுகளும் முன் வரத் தயங்குகின்றன. மனித உரிமைகளை ஏகபோகமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக் கருதும் உலகச் சட்டாம்பிள்ளை அங்கு நடைபெறும் அக்கிரமங்களுக்கு மறைமுகமாக உதவி செய்து கொண்டிருந்த காலம் மாறி இப்போதெல்லாம் பகிரங்கமாகவே செயல்பட்டு வருகிறது. 

சமீப காலமாக அன்னியர்களின் அச்சுறுத்தலுக்கும், பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிய சிரியாவின் மீது விரைவில் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த உலக நாடுகளின் ஒப்புதலைப் பெற துடித்துக் கொண்டிருக்கிறது அன்னிய அரசு அவர்களது நோக்கத்தை விரைவில் அமுலுக்குக் கொண்டு வருவதற்கு எந்த மோசடியையும் செய்வார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தத் தடையை ஏற்படுத்துவதில் ரோம் (இத்தாலிய, அதனை அடுத்துள்ள) நாட்டவர்களின் கை ஓங்கியிருக்கும் என்பது நபி மொழியிலிருந்து புரிந்து கொள்ளப்படும் தகவலாகும்.

இராக் தினார்கள் செல்லாக்காசாக ஆகும்:
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இராக் நாணயங்களும், அதன் உணவுகளும் (ஒரு காலத்தில் அந்நாட்டு மக்கள் பயன்படுத்த முடியாதபடி) தடுக்கப்படும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்.

இராக் நாணயம் ஒரு காலத்தில் செல்லத்தக்கதாக இருக்காது, அதனால் அங்கு உணவுப் பொருட்கள் வாங்கும் திறனின்றி மக்கள் தவித்துக் கொண்டிருப்பார்கள் என்று 1430 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த செய்தியை இன்று நேருக்கு நேர் தொலைகாட்சியின் மூலம் நாம் கண்டு வருகிறோம். அந்நாட்டு நாணயங்கள் தெருவீதியில் கிழித்து எறியப்படும் கோரச்காட்சியும், அதனால் அந்நாட்டு மக்கள் உணவுப் பொருள் வாங்கும் திறனின்றி பஞ்சத்தால் அவதியுறுவதும் அனைவருடைய மனச்சாட்சியையும் அசைத்துப்பார்க்கிறது.
இராக் நாணயம் அந்நாட்டு மக்களால் பயன்படுத்த முடியாத படி தடை செய்யப்படும் என்பதற்கு நாணய வளம் தரும் பெட்ரோல் கிணறுகளை அந்நாட்டு மக்களால் பயன்படுத்த முடியாத நிலை ஒரு காலத்தில் ஏற்படும், அப்போது பஞ்சம் தலைவிரித்தாடும் என்று பொருள் கொள்வதற்கும் தடை ஏதும் இல்லை. இதுவும் இன்று இராக்கில் நடை பெறுகிறது.

கருப்புத் தங்கம் அதிகம் விளையும் நாடு:
(மேற்காசியாவில் பாயும்) ஃபுராத் (யூப்ரட்டீஸ்) நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், புஹாரி.

முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள வேறொரு அறிவிப்பில், தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தும், அதனை செவியுறும் மக்கள் அதனை எடுப்பதற்காக அங்கு நோக்கிச் செல்வார்கள், அதனருகில் இருப்பவர்களோ, இவர்களை உள்ளே நுழைவதற்கு அனுமதித்தால், அனைத்தையும் அபகரித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்று கூறி அவர்களோடு போரிடுவார்கள், அந்த போரில் நூறில் தொன்னூற்று ஒன்பது பேர் கொல்லப்படுவார்கள் என்று வந்திருக்கிறது.

இந்த ஃபுராத் நதி துருக்கியில் தோன்றி குவைத் வழியாக சென்று அதன் பெரும் பகுதி இராக்கில் பாய்கிறது. பிரபலமிக்க கர்பலாவையும் கடந்து செல்கிறது. தங்கப் புதையல் வெளிப்படும் என்பதற்கு உண்மையிலே தங்கப் புதையல் வெளிப்படும் என்றும் கருதலாம். அது இன்னமும் நடை பெற வில்லை. எதிர்காலத்தில் தங்கம் கட்டியாக கட்டியாக அங்கு வெளிப்படும், அப்போது அதனை எடுப்பதற்காக நடை பெறும் சண்டையில் பலர் கொல்லப்படுவார்கள்.
அதே போல் கருப்புத் தங்கமான பெட்ரோல் வளம் எனவும் அதற்குப் பொருள் கொள்ளலாம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்தவர்களுக்கு பெட்ரோல் பற்றிய ஞானம் அறவே இல்லாதிருந்ததாலும், அவர்களிடையே விலை உயர்ந்த பொருளாக தங்கம் மட்டுமே இருந்து வந்துள்ளதாலும் (தங்கம் அவர்களிடம் விலை மதிப்பு மிக்க பொருளாக கருதப்பட்டு வந்துள்ளது என்பதற்கு பல நபி மொழிகளில் சான்றுகள் உள்ளன. இது அதற்குரிய இடம் இல்லை என்பதால் தவிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது) பெட்ரோலைத் தங்கத்திற்கு ஒப்பிட்டு தங்கம் என்ற வார்த்தையையும், அது சார்ந்த கருத்துகளையுடைய வார்த்தைகளையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இங்கு பயன்படுத்தி இருக்கலாம். இவ்வாறு பேசுவது அரபி இலக்கியத்தில் ஒரு வகையைச் சார்ந்ததாகும். அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த பெட்ரோலைப்பற்றி புரிந்து கொள்வார்கள் என்றிருந்தால் அம்மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பெட்ரோல் பற்றிய செய்தியினை அன்றே எடுத்துக் கூறியிருப்பார்கள். அது சாத்தியமில்லாததால், மேற் கூறியவாறு அவர்களது வார்த்தைப் பிரயோகம் அமைந்து இருக்கலாம்.
கருப்புத் தங்கமான இந்தப் பெட்ரோல், இன்றைய மனித வாழ்க்கையில் மஞ்சத்தங்கத்தை விட அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. மேலும் ஃபுராத் நதி பாயும் இராக் நாட்டில் உற்பத்தியாகும் கருப்புத் தங்கமான பெட்ரோல், உலகிலேயே மிகவும் தரம் வாய்ந்ததாகும். அதற்கான உற்பத்தி செலவு, மற்றைய நாடுகளில் ஏற்படும் செலவினைவிட பன்மடங்கு குறைவு உலக நாடுகளில் பெறப்படும் பெட்ரோலில் பெருமளவு இராக்கிலிருந்தே கிடைக்கிறது. எனவே, இராக் நாட்டின் மீது உலக நாடுகள் தங்களது பொறாமைக் கண்களின் பார்வையை திருப்பியது. குறிப்பாக உலக சட்டாம்பிள்ளையின் கண்களை உறுத்தியது. எனவே, அங்கு கிடைக்கும் கருப்புத் தங்கத்தை கொள்ளையடிக்க கொள்ளைக் கூட்டத்தினர், இரகசியக் கூட்டை ஏற்பத்திக் கொண்டு எத்தனையோ சதித் திட்டங்கள் தீட்டின. அதனுடைய வெளிப்பாடுதான் இப்போது இராக்கின் மீது தொடுக்கப்பட்ட அன்னியர்களின் அநியாயமான போர். இதற்கான ஐ.நா. சபையின் ஒப்புதல் பெறப்பட வில்லை, உலக நடை முறை விதிகள் மீறப்பட்டுள்ளன. இராக்கின் பெட்ரோல் மீது கொண்ட அவர்களது ஆசை, அறிவுக்கண்களை மறைத்து, அவர்களை மிருகங்களாக மாற்றியது. அதனால் நிரபராதியான பல இலட்ச அப்பாவி மக்கள் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது போன்ற கொடுமைகளும், சோதனைகளும் நடை பெறும் என்பதால்தான் அங்குள்ள மக்கள் அதனை எடுக்க வேண்டாம் என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்து செய்திருக்கலாம்.

இந்த நபி மொழியில் அறிவிக்கப்பட்ட செய்தி உறுதிபடும் விதத்தில்தான் இராக் மீது அன்னியன் தொடுத்த யுத்தம் அமைந்திருக்கிறது. உலகினை மிரட்டும் உயிர் கொல்லி பயங்கர ஆயுதங்களையும், பேரழிவினை ஏற்படுத்தும் அணு ஆயதங்களையும் இராக் பதுக்கி வைத்துள்ளது என்ற பொய்யான காரணங்களை புனைந்து, ஐ.நா. சபையின் ஒப்புதல் பெறாமல், உலக நடை முறைகளை மதிக்காமல் அநியாயமாக தொடுக்கப்பட்ட போரின் உள்நோக்கம் கருப்புத் தங்கமான பெட்ரோல்தான் என்பதை உலக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். போர் முடிந்து விட்டது, பேரழிவை ஏற்படுத்தும் உயிர் கொல்லி ஆயதங்களைக் கண்டுபிடித்தார்களோ இல்லையோ, அந் நாட்டில் இருக்கும் பெட்ரோல் கிணறுகளை அவசர அவசரமாகக் ஓசையின்றி கையகப்படுத்திக் கொண்டார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். இதன் மூலம் அவர்களது போலியான முகத்திரை உலக அரங்கில் கிழிக்கப்பட்டு விட்டது. மேலும், பெட்ரோலை விற்பனை செய்யும் அதிகாரம் யாருக்குரியது என்ற குடும்பிச் சண்டை இப்போதே ஆக்கிரமிப்பு படைகளிடையே ஆரம்பமாகிவிட்டது. இந்த யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு நாடும், இராக்கின் பெட்ரோலில் தங்களுக்கும் பங்கு உண்டு என உரிமை கொண்டாட நினைக்கிறது. உலக சட்டாம்பிள்ளையோ அனைத்தையும் அபகரித்து விட்டு, மற்ற நாடுகளுக்கு நாமம் போட முனைக்கிறது. இதனால் அவர்களிடையே சண்டை மூண்டு, அதற்காக நடை பெறும் அந்தச் சண்டையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியது போல் ஒவ்வொரு நூறு பேரிலும் தொன்னூற்று ஒன்பது பேர் சமீப காலத்தில் கொல்லப்படுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அநியாயக் காரர்கள் அழிந்தே தீருவார்கள் என்பது இறைவன் வகுத்த நியதி. வாய்மையே வெல்லும், அசத்தியம் அழிந்தே தீரும் என்பது இறைவாக்கு. அதில் எந்த மாற்றமும் செய்ய யாராலும் முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
நாளை நடக்கும் நிகழ்ச்சி அல்ல அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை எந்த மனிதராலும் திட்டவட்டமாக அறிந்து கொள்ள முடியாது எனும் போது, 1430 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஒரு நிகழ்வினை மிகப் புள்ளிவிவரத்துடன் தெளிவாக ஒரு மனிதரால் சொல்ல முடிகிறது என்றால் அவர் ஒரு சராசரி மனிதராக இருக்க முடியாது. சாதாரண மனிதர் என்ற முறையில் அதனை தெரிந்து வைத்திருக்க முடியாது. மாறாக அந்த நிகழ்ச்சியினை நடத்தி காட்டிடும் இறைவனால்தான் அவர்களுக்கு அது அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அகில உலக மக்களின் இரட்சகனான அல்லாஹ்வின் தூதுச் செய்தியை சொல்ல வந்த ஒரு இறைத்தூதர் என்ற முறையில்தான் அவர்களுக்கு இது போன்ற செய்திகள் அறிவிக்கப்பட்டிருக்க முடியும். நபியவர்களின் இந்த முன்னறிவிப்புகள், அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு இறைத்தூதர்தான் அவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
எனவே, இன்றைய உலக மக்கள், இறைத்தூதரின் இந்த முன்னறிவிப்புகளை நேருக்கு நேர் பார்த்து, அவர்களின் அறிவிப்பு உண்மையானது என்பதை அறிந்த பிறகாவது, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு இறைத்தூதராகும் என்பதை ஏற்று, இஸ்லாத்தில் இணைந்து, அவர்களின் தூய போதனைகளை தமது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியது மறுமையில் மனிதர்களிடம் நடை பெறும் விசாரணை குறித்தும், அதன் பிறகு மனிதர்கள் செல்லுமிடமான சுவர்க்கம், நரகம் குறித்தும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய செய்தி அனைத்தும் உண்மையானதுதான் என முழு மனதுடன் நம்பிக்கை கொண்டு, அதற்கேற்ப நமது செயல்பாடுகளை சீர் செய்து, சுவனம் செல்வதற்குரிய சீரிய வழியினை தேர்தெடுத்து வாழ வேண்டும். நபியவர்கள் இவ்வுலகில் நடக்கவிருப்பதாக கூறியவைகள் ஒவ்வொன்றாக நடந்து கொண்டுள்ளது எனும் போது, அவர்கள் மறுமை நாள் குறித்து கூறிய அனைத்தும் நிச்சயம் நடக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளலாகாது.

இறைத்தூதரின் ஏற்கப்பட்ட இரண்டு பிரார்த்தனை:
ஒரு நாள் ஆலிய்யா என்ற இடத்திலிருந்து திரும்பி வரும் போது பனூ முஆவியா கூட்டத்தாரின் பள்ளிக்குள் சென்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுதார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து தொழுதுகொண்டோம். அங்கு நீண்ட நேரம் தனது இரட்சகனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். பின்பு எங்களை நோக்கி, எனது இரட்சகனிடம் மூன்று பிரார்த்தனைகளை முன் வைத்தேன். அதில் இரண்டை ஏற்றுக் கொண்டான். ஒன்றை மறுத்து விட்டான் என்று கூறிவிட்டு, என் சமூக மக்களை பஞ்சத்தாலும், வெள்ளப் பிரளயத்தாலும் ஒட்டு மொத்தமாக அழித்து விட வேண்டாம் என்று கேட்டேன். அந்த இரண்டினையும் ஒப்புக் கொண்டான். மேலும், என் உம்மத்தவர்கள் தங்களுக்கு மத்தியிலேயே பிரச்சனை செய்து கொள்ள வைக்காதே என்று கேட்டேன். அதனை மறுத்து விட்டான்.
அறிவிப்பாளர்: சஃத்(ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம்.

வேறொரு அறிவிப்பில், என் சமுதாய மக்கள் தங்களிடையே சண்டையிட்டு, அழிந்து போகும் நிலைக்கு விட்டு விடாதே! என்று பிரார்தனை செய்ததாக வந்திருக்கிறது. இந்தப் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ள வில்லை. இதன் வெளிப்பாடு இன்று இஸ்லாமிய சமூத்தில் மிக தெளிவாகவே தெரிகிறது. இஸ்லாமியச் சமுதாயம் தங்களிடையே சண்டையிட்டு அழிந்து கொண்டிருப்பதை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம்மை அதிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஆமீன்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More