சற்றுமுன்

Sunday 24 July 2011

ஹஜ்ஜின் பெயரால் போலி ஹதீஸ்கள்

ஹஜ் கடமையை நபியவர்கள் இந்த உம்மத்திற்கு மிக இலகுவாக காட்டித் தந்து செயற்படுத்திக்காட்டினார்கள். மதீனாவின் துல்உலைபா என்னும் இடத்டதிலிருந்து இஹ்ராம் அணிந்து மக்காவில் ஹஜ் கிரிகைகளை முடித்து ஊர் திரும்புவரையுள்ள அனைத்து விடயங்களையும் சொல்லிதந்தார்கள். இந்த அடிப்படையில்தான் ஹாஜிகள் ஹஜ்கிரிகைகளை புரிந்து செயற்பட வேண்டும்.

ஹஜ்கடமையில் மதீனா சென்று எட்டு நாட்கள் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும் என்பதும் அங்கு நபியவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய வேண்டும் என்பதும் ஹஜ் கிரிகையின் பிரதான அம்சம் போல் முகவர்கள் விளம்பரம் கொடுக்க சில பள்ளிவாசல் இமாம்களும் சில ஹதீஸ்களை முன்வைத்து அதற்கேற்ற வகையில் பயான் பண்ணகிறார்கள். ஹஜ்ஜூக்கு செல்லவேண்டும் என ஆசை கொள்கின்ற மக்களும் இந்த விளம்பரங்களையும் பயான்களையும் கேட்டு அவை உண்மையென நம்பி ஆயத்தமாகுகிறார்கள். எனவே இது பற்றிய உண்மையை நாம் புரிந்து கொள்வோம்.
மஸ்ஜிதுன் நபவியைப் பொறுத்த வரைக்கும் அதில் தொழப்படும் ஒரு தொழுகை ஏனைய பள்ளிவாசல்களில் தொழப்படும் தொழுகையை விட ஆயிரம் மடங்கு சிறப்பிற்குரியதாகும். ஆனால் கஃபாவில் தொழப்படும் ஒரு தொழுகை ஏனைய பள்ளிவாசல்களில் தொழப்படும் தொழுகையை விட ஒரு இலட்சம் மடங்கு சிறப்பானதாகும் என்பது நபி மொழியாகும். (நூல் அஹ்மத்) எனவே மக்கா மதீனாவில் தொழக்கூடிய வாய்ப்புக்கள் கிடைத்தால் அதனை முடிந்தளவு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
உண்மையில் நன்மை அதிகம் தேட வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு மனிதன் மக்காவில் அதிகம் தங்கியிருந்து அமல் செய்யவே ஆசைப்பட வேண்டும். ஆனால் மக்காவிற்கு வழங்கப்படும் முக்கியததுவத்தை விட மதீனாவிற்கு அதிகம் முக்கியத்துவமும் கவனமும் கொடுப்பதில் என்ன மர்மம் உண்டு என்பது குறித்து ஆய்வு செய்கின்ற போது இரண்டு அடிப்படை செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.
ஒன்று ஊர்ஜிதமற்ற ஹதீஸ்களின் செல்வாக்கு. அதாவது நபியவர்கள் சொன்னதாக பலயீனமான செய்திகள் இடம்பெற்றுள்ளன.
“யார் எனது பள்ளிவாசலில் ஒரு தொழுகை கூடத் தவறாமல் நாற்பது தொழுகைகளைத் தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்திலிருந்தும், வேதனையிலிருந்தும், நயவஞ்சகத் தன்மையிலிருந்தும் விடுதலையை வழங்குவான்”.
இந்த ஹதீஸில் இடம்பெறும் நபீத் பின் உமர் என்பவர் முகவரியற்றவர், நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாதவர். எனவே இந்த செய்தி பலயீனமானதாகும்.
இந்த பலயீனமான ஹதீஸின் அடிப்படையில்தான் மதீனாவில் எட்டு நாட்கள் ஹாஜிமார்களைத் தங்க வைக்கின்றனர். நன்மை நாடி மஸஜிதுன் நபவிக்கு பயணம் செல்ல முடியும். ஆனால் ஹஜ் கடமையில் ஒன்று போன்று அதை ஆக்கிக் கொள்வது தவறாகும்.
இதில் இரண்டாவது செய்தி என்னவெனில் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வது பற்றிய செய்திகளாகும். ஹஜ் கிரிகைகளில் நபியவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதற்கு சம்பந்தமே கிடையாது.
ஹஜ்ஜூக்கு செல்பவர்கள் மஸஜிதுந் நபவியிலுள்ள கப்றுகளை (நபி (ஸல்) அவர்களுடையதும் அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) அவர்களுடையதும் ஜன்னதுல் பகீயில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கப்றுகளையம் தரிசித்து அவர்களுக்காக வேண்டி பிரார்திக்கவேண்டும். இப்படியொரு ஒழுங்கு முறை உண்டு என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும்.
ஸியாரத் செய்வதனால் மறுமையில் ஷபாஅத் கிடைக்குமென்றோ நபிகளாரை நேரடியாக சந்தித்த நன்மை கிடைக்குமென்றோ எண்ணக்கூடாது.
ஹஜ் கடமையையும் ஸியாரத்தையும் சம்பந்தப்படுத்தி வந்திருக்கும் பலயீனமான ஹதீஸ்களை சுருக்கமாக இங்கு பட்டியலிடுகின்றோம்.
யார் ஹஜ் செய்து எனது கப்ரை ஸியாரத் செய்யவில்லையோ அவர் என்னைப் புறக்கணித்து விட்டார். (தாரகுத்னி)
இந்த ஹதீஸில் இடம்பெறும் முஹம்மத் பின் நுஃமான் என்பவர் மிக பலயீனமானவர் என்று இமாம் ஸைலகீ (ரஹ்)குறிப்பிடுகிறார். மேலும் அவரது தந்தையும் பலயீனமானவர்தான் என இப்னு அதீ (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
யார் ஹஜ் செய்து எனது கப்ரையும் ஸியாரத் செய்வாரோ அவர் என்னை உயிரோடு சந்தித்தவர் போலாவார். (நூல்:தப்ரானீ, பைஹகீ)
இந்த அறிவிப்பில் இடம்பெறும் ஹப்ஸ் பின் அபீ தாவுத் என்பவர் பலயீனமாவர் என இமாம் பைஹகி (ரஹ்)அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இரண்டு ஹதீஸ்களும் நேரடியாக ஹஜ் கடமையோடு ஸியாரத் செய்வதை சம்பந்தப்படுத்தி வந்த செய்திகளாகும்.
இது தவிர வேறு சில செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
யார் என்னுடைய கப்ரை அல்லது என்னை ஸியாரத் செய்வாரோ மறுமையில் நான் அவருக்காக பரிந்துரைப்பவராக அல்லது சாட்சியாளனாக இருப்பேன்.
இந்த அறிவிப்பை செய்த இமாம் பைஹகி அவர்கள் இந்த அறிவிப்பாளர் வரிசையே முகவரியற்றது, அதாவது இனம்காணப்படாத அறிவிப்பாளர்களைக் கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
யார் நன்மையை நாடி மதீனாவுக்கு வந்து என்னை ஸியாரத் செய்வாரோ மறுமையில் நான் அவருக்காக பரிந்துரைப்பவராக, சாட்சியாளனாக இருப்பேன்.
ஸுஅபுல் ஈமானில் இடம் பெறும் இந்த அறிவிப்பில் சுலைமான் பின் யஸீத் என்பவர் வந்துள்ளார். இவர் பலயீனமானவர் என இமாம் இப்னு ஹஜர் மேலும் தஹபி (ரஹ்)போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
யார் என்னுடைய கப்ரை ஸியாரத் செய்வாரோ அவருக்கு என்னுடைய ஷபாஅத் கட்டாயம் கிடைக்கும்.
இந்த அறிவிப்பில் இடம் பெறும் அப்துல்லாஹ் பின் உமர் என்பவர் பலயீனமானவர் என இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி கூறியுள்ளார். இவரை சில அறிவிப்புக்களில் உபைதுல்லாஹ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவறு என இதை அறிக்கும் இமாம் இப்னு குஸைமாவே குறிப்பிட்டுள்ளார். அதே போன்று பஸ்ஸார் உடைய அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் இப்றாகிம் அல் கிப்பாரி உள்ளார். இவர் பலயீனமானர் ஆவார்.
யார் எனது கப்ரையும் எனது பாட்டன் இப்ராகிம் நபியையும் ஒரு ஆண்டில் ஸியாரத் செய்வாரோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார். மற்றொரு அறிவிப்பில்- அவருக்கு அல்லாஹ்விடம் நான் சுவர்க்கத்தைப் பெற்றுக்கொடுப்பேன் என்றும் வந்துள்ளது.
இந்த ஹதீஸ் எந்த கிரந்தத்திலும் பதிவுசெய்யப்படாத அடிப்படையில்லாத இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தி என இமாம் நவவீ(ரஹ்) குறிப்பிடுகிறார். இதை இமாம் சுயூத்தி (ரஹ்)அவர்கள் தனது மவ்லூஆத் பற்றிய கிரந்தத்தில் ஏற்றுக்கொள்கிறார்.
யார் என்னைத் ஸியாரத் செய்வதைத் தவிர வேறு எந்தத் தேவையும் இல்லாமல் வந்து ஸியாரத் செய்வாரோ மறுமை நாளில் நான் அவருக்காக பரிந்துரை செய்வது என்மீது கட்டாயமாகும்.
இந்த அறிவிப்பு தப்ரானீ எனும் கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதிலும் மேற்சொன்ன அப்துல்லாஹ் பின் இப்றாகீம் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர் பலயீனமானவர் என்பது தெளிவானதாகும்.
எனவே ஹஜ் செய்பவரகள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை விளங்கி அமல்கள் செய்வதோடு பயான் பண்ணுகிற உலமாக்கள் உண்மையான நம்பகத்தன்மையுடைய ஹதீஸ்களை முன்வைக்கவேண்டும். ஆர்வமூட்டுவதற்காக ஹதீஸ் சொல்வதாக நினைத்து மக்களை ஏமாற்றி தப்பாக வழிநடாத்தக்கூடாது.


எழுதியவர்/பதிந்தவர்/உரை

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More