சற்றுமுன்

Tuesday, 9 August 2011

ரேஷன் பொருட்களை மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் திட்டம்: தமிழக அரசு ஆலோசனை

தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களை வீடு வீடாக வினியோகம் செய்திட அரசு ஆலோசித்து வருகிறது. இது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தனது முதல் சட்டசபைத் தேர்தலின் போது மக்களுக்குக் கொடுத்த முக்கியமான வாக்குறுதியாகும். 

தே.மு.தி.க.வை ஆரம்பித்த பின்னர், விஜயகாந்த் தலைமையில் அக்கட்சி தேர்தலைச் சந்தித்தபோது விஜயகாந்த் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். அதில் ஒன்று வீடு வீடாக ரேஷன் பொருட்களை மக்களுக்கு நேரடியாக விநியோகிப்போம் என்பதாகும். 

அந்த வாக்குறுதியைத் தான் தற்போது அ.தி.மு.க. அரசு பரிசீலிக்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போதைய மக்கள் தொகை 7 கோடியே 80 லட்சம். இதில் சுமார் 1 கோடியே 10 லட்சம் பேர் ரேஷன் அட்டைகள் வைத்துள்ளனர். ரேஷன் அட்டைகள் வைத்துள்ளவர்களுக்கு 32 மாவட்டங்களில் உள்ள 36 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

இதில் அரிசி, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது எடை குறைப்பு ஏற்படும் நிலையில் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. மேலும் மாதம் முழுவதும் பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் என அரசு உத்தரவு இருந்தாலும் பெரும்பாலான கடைகளில் மாதக்கடைசியில் பொருட்கள் வாங்கச் செல்பவர்களுக்கு சீனி, மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் கிடைப்பதில்லை. 

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள், புரோக்கர்கள் அப்பொருட்களை வாங்கி கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகளிடம் புதிய தி்ட்டம் தீட்டுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ரேஷன் கடைகளில் உள்ள அனைத்து பொருட்களையும் வீடு, வீடாகச் சென்று வினியோகிக்க நடமாடும் வேன்கள் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More