சற்றுமுன்

Sunday 28 August 2011

மோடியை மீறி லோகாயுக்தாவை நியமித்தார் குஜராத் ஆளுநர்!

குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியைக் கலந்தாலோசனை செய்யாமல் அம்மாநில ஆளுநர் வெள்ளிக் கிழமையன்று லோகாயுக்தாவை நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த ஏழரை ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் உள்ள லோகாயுக்தாவை நியமிக்குமாறு கோரி குஜராத் ஆளுநர் கமலா பனிவாலை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சக்திசிங் கோஹில் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் வெள்ளிக் கிழமை மதியம் சந்தித்தனர்.

ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர் கோஹில், ஓய்வு பெற்ற குஜராத் உயர் நீதரிமன்ற நீதிபதி ஆர்.ஏ. மேத்தாவை லோகாயுக்தாவாக நியமித்து வியாழக் கிழமையன்று அரசாணை பிறப்பித்துள்ளதாக ஆளுநர் கமலா கூறியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். லோகாயுக்தா நியமனம் குறித்த கோப்பு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

75 வயதான மேத்தா குஜராத் உயர் நீதிமன்றத்தில் 1982ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை நீதிபதியாகப் பணியாற்றியவர். சில முறை அவர் தலைமை நீதிபதி பொறுப்பிலும் இருந்துள்ளார். குஜராத் மாநில லோகாயுக்தாவாக மேத்தாவை நியமிக்க அம்மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முகோபாத்யாயா பரிந்துரைத்தார். இவரது பரிந்துரையை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக் கொண்டது.

மாநில லோகாயுக்தா சட்டத்தின்படி, லோகாயுக்தாவை நியமிப்பதற்கு ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்றும் மாநில அரசு இதில் தலையிட முடியாது என்றும் கோஹில் கூறியுள்ளார்.

நீதிபதி மேத்தாவை லோகாயுக்தாவாக நியமிக்கப்பட்டது தொடர்பான அரசாணையை வெளியிடுமாறு பல நாள்களுக்கு முன்னரே ஆளுநர் மாநில அரசைக் கேட்டுக் கொண்டு, பின்னர் இதுகுறித்து பலமுறை நினைவூட்டல் அனுப்பியும் மாநில அரசு செயல்படாததால் ஆளுநரே நேரடியாக லோகாயுக்தாவை நியமிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் கோஹில் கூறியுள்ளார்.

ஆளுநரின் இச்செயல் சட்டத்துக்குப் புறம்பானது என்று வர்ணித்துள்ள அமைச்சரவைச் செய்தித் தொடர்பாளர் மற்றும் சுகாதார அமைச்சர் ஜெயநாரயன் வியாஸ், அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு ஏற்படவே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் எந்த ஒரு நியமனத்திலும் அரசை மீறி செயல்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் மோதல் ஏற்படும் இரண்டாவது மாநிலமாக குஜராத் ஆகியுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்படும் உரசல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் குஜராத்தில் இது தொடங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.





0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More