சற்றுமுன்

Friday, 2 September 2011

சந்தேக முள் மீண்டும் மோடியை நோக்கி !

குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 முஸ்லிம் இளைஞர்களை “இவர்கள் குற்றம் செய்ததை நிரூபிப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து சந்தேகத்தின் முள் மீண்டும் மோடியை நோக்கித் திரும்பியுள்ளது.

இந்தக் கொலை வழக்கில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்கவேண்டும் என்று 2007 டிசம்பரில் ஹரேன் பாண்டியாவின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.

கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாண்டியாவின் உறவினர்கள் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

2003 மார்ச் 23ம் தேதி ஹரேன் பாண்டியா அஹமதாபாதில் லோ கார்டனில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதற்காக வெளியே வந்த பாண்டியாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலையைச் செய்தது முஸ்லிம்கள்தான் என்று அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து சிறையிலடைத்தது மோடி அரசு.

ஆனால் என் மகனைக் கொலை செய்தது மோடிதான் என்று பட்டவர்த்தனமாக அறிவித்தார் பாண்டியாவின் தந்தையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீவிர உறுப்பினருமான விட்டல் பாய். கேசுபாய் பட்டேலின் ஆதரவாளரும், எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமாக இருந்த ஹேரேன் பாண்டியாவுக்கும், மோடிக்கும் ஒரு காலத்திலும் ஒத்துப்போனது கிடையாது.

2001 இறுதியில் முதல்வராகப் பொறுப்பேற்ற மோடிக்கு 2002 பிப்ரவரிக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் அவர் எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியை விட்டுத் தருமாறு பாண்டியாவிடம் கேட்டார். ஆனால் பாண்டியா மறுத்து விட்டார். இதனால் இவ்விருவரின் பகைமை அதிகரித்தது.
2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் மோடிக்கும், உயர்நிலையில் இருப்பவர்களுக்கும் உள்ள பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் முன்பு பாண்டியா வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவர் மோடியின் ஆபத்தான எதிரியானார். இந்தச் சூழ்நிலையில்தான் பாண்டியா படுகொலை செய்யப்பட்டார்.





0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More