சற்றுமுன்

Tuesday 27 September 2011

சவூதி: இனி பெண்களுக்கும் வாக்குரிமை;தேர்தலில் நிற்கும் வாய்ப்பு !

இஸ்லாமிய மத சட்டத்திற்குட்பட்டு அரசாட்சி செய்வதாகக் கூறும் சவூதி அரபியாவில், இனி பெண்களும் சுயமாகத் தேர்தலில் நிற்கவும், தம் விருப்பப்படி வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவும் செய்யலாம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷூரா கவுன்சில் எனப்படும் சவூதியின் நாடாளுமன்றமான 'அரசாலோசனை மண்டபம்' நேற்று மீண்டும் கூடிய போது, சவூதி மன்னர் அப்துல்லாஹ் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை பலத்த கையொலி வரவேற்புகளுக்கிடையே வெளியிட்டார். "இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே, மூத்த மார்க்க அறிஞர்களின் ஆலோசனை பெற்றே இவ்வறிவிப்பு செய்யப்படுகிறது" என்றார் மன்னர்.


எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் முதல் சவூதி பெண்டிர் தேர்தலில் நின்று வென்று  ஷூரா கவுன்சிலிலும் பங்கு பெறலாம் என்றும் தேர்தலில் வாக்குரிமையும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் மன்னர் தனது ஐந்து நிமிட தொடக்க உரையில் குறிப்பிட்டார். (இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்வரும் வியாழன் அன்று சவூதி நாடு தயாராகி உள்ளது இங்குக்  குறிப்பிடத்தக்கது)

சவூதி அரேபியாவின்  சமூக அரசியல் மாற்றங்களின்  முதல்படியாக இவ்வறிவிப்பு கருதப்படுகிறது. மேலும்  பாலினங்கள் ஒன்று சேர்ந்து கூட்டங்கூட தடை உள்ள சவூதி அரேபிய சமூகத்தில் இவ்வறிவிப்பு கலவையான உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

. "இது மகத்தான நற்செய்தி, இறுதியில் பெண்குரல் செவிசாய்க்கப்பட  வழி கோலப்பட்டுள்ளது " என்று  சவூதி எழுத்தாளரும், பெண்ணுரிமைப் பேராளருமான வஜிஹா அல் ஹுவைதர் மன்னரின் அறிவிப்பை மகிழ்ந்து  வரவேற்றுள்ளார்.  "பெண்களுக்கான மற்ற தடைகளையும், குறிப்பாக வாகனம் ஓட்டுவதில் , ஆண் துணையின்றி விழாக்கள் நடத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும்  மன்னரின் நேற்றையஅறிவிப்பில், பெண்கள் வாகனமோட்டுவது குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. (சட்ட ரீதியாக சவூதியில் பெண்கள் வாகனமோட்ட தடை இல்லை எனினும், பெண்களுக்கு வாகன உரிமம் வழங்கப்படுவதில்லை என்பது அறியத்தக்கது )
 
 
 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More